Sunday, May 31, 2009

மனிதனுக்கு எது உண்மையான சந்தோசம்

உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக சந்தோசத்தை அனுபவிக்கிறான் . சந்தோசத்தின் பரிமாணத்தை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெவ்வேறு கோணத்தில் சந்திக்கிறான் . ஒருவன் அமைதியில் சந்தோசத்தை காண்கிறான் , இன்னொருவன் நல்ல உறவுகளையும், நண்பர்களையும் பெற்றதில் சந்தோசம் அடைகிறான் , மற்றொருவன் ஒவ்வொரு செயலிலும் வெற்றி காணும் போது சந்தோசம் பெறுகிறான் . ஆனால் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் சந்தோசத்தை வெவ்வேறு விதமாக அனுபவித்தாலும் , இந்த சந்தோசமானது மனிதனுக்கு புதிய தெம்பைக் கொடுக்கிறது . இன்பமயமான சூழ்நிலையை உருவாக்குகிறது , உறவுகளை பலப்படுத்துகிறது . ஒவ்வொரு மனிதனும் சந்தோசத்தை எந்த நோக்கத்தோடு புரிந்து கொள்கிறான் என்பது மிகவும் முக்கியம் .

வாழ்க்கை என்றால் அதனோடு சந்தோசத்தையும் இணைத்து பேசப்படுகிறது . வாழ்க்கையின் சந்தோசம் ஆத்மா சந்தோசம் என்றும் , வெளிப்படையான சந்தோசம் என்றும் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது . ஒவ்வொரு மனிதனும் அவனது முழுமையான வாழ்க்கையில் இந்த இரண்டு வகையான சந்தோசங்களை அனுபவிக்கிறான் . மனிதன் இளவயதிலே பெரிய பதவியை வகிக்கிறான் , அதிக செல்வத்தை சம்பாதிக்கிறான் , ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறான் . அந்த சின்ன வயதில் ஒளிமயமான பல வண்ணங்களுடைய வாழ்க்கை மனிதனுக்கு சந்தோசத்தை தருகிறது . அப்போது அவன் சந்தோசத்தை குறுகிய நோக்கத்தோடு பார்க்கிறான். அந்த இளவயதானது சந்தோசத்தை ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்து ரசிக்கிறது . அந்த வயதில் மனிதன் அவனுடைய சந்தோசத்தை மட்டும் தான் சிந்திக்கிறான். மேலும் மனிதனின் எண்ணங்களும் அவனைப் பற்றி தான் சிந்திக்கிறது . தான் என்ற எண்ணம் கொண்டு வாழும் மனிதனின் வாழ்க்கையில் சந்தோசம் நிலைத்து இருப்பதில்லை . பொன், பொருள் , பதவி , கௌரவம், ஆடம்பரம் , ஆணவம் ஆகிய அனைத்திலும் சந்தோசத்தை காணும் மனிதனுடைய வாழ்க்கை வெறும் வெத்து வெட்டான வாழ்க்கைக்கு சமமாகும் . இதனை வெளிப்படையான சந்தோசம் என்று சொல்லலாம் . இந்த வெளிப்படையான சந்தோசம் மனிதனுக்கு ஒரு போதும் நிலைப்பதில்லை . இந்த தத்துவத்தை மனிதன் கடைசி காலத்தில் அறிந்து கொள்கிறான் . அதுவரை இந்த பகட்டான வாழ்க்கை மனிதனை படாதபாடு படுத்தி விடுகிறது . அந்த சமயத்தில் மனிதன் பள்ளம் மேடு , ஏற்றத் தாழ்வு , உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வாழ்க்கையினுடைய பல்வேறு பரிமாணங்களை அனுபவிக்கிறான் . மனிதன் வாழ்க்கையில் பல சம்பவங்களை சந்திக்கிறான் . அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவனுக்கு ஒவ்வொரு பாடத்தை கற்பிக்கிறது .

அவன் வாழ்க்கையில் பலமுறை விழுந்து எழுகிறான் . ஒவ்வொரு விழுதலும் அவனுக்குள்ளே மாற்றத்தை கொண்டு வருகிறது . இந்த மாற்றம் அவனுடைய மனதை பக்குவப்படுத்துகிறது . அவனுடைய பகுத்தறிவை வளரச் செய்கிறது . இந்த மாற்றமானது மனிதனுடைய எண்ணத்தை மாற்றி அமைக்கிறது . மனிதனுக்கு வாழ்க்கையில் பல எண்ணங்கள் தோன்றுகின்றன . அவனுடைய ஒவ்வொரு எண்ணமும் வாழ்க்கையில் ஒவ்வொரு சம்பவத்தை நிகழச் செய்கிறது. இந்த சம்பவமானது அவனை ஆக்கப்பூர்வமான செயலை செயல்படுத்த வைக்கிறது . இந்த மாற்றமானது மனிதனை தனக்கு மட்டும் எண்ணாமல் மொத்த சமூகத்தை பற்றி எண்ணவைக்கிறது. வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திலிருந்து கிடைக்கும் நல்ல பலன்களை மனிதன் சமூகத்தோடு பகிர்ந்து கொள்கிறான் . இந்த மாற்றம் மனிதனுக்கு பரந்த மனப்பான்மையை கொடுக்கிறது . அவன் அனைத்தையும் பரந்த நோக்கத்தோடு அணுகுகிறான் . மனிதன் சமூகத்தை பற்றி அக்கறை எடுத்துக் கொள்கிறான் . அப்போது மனிதன் தன்னுடைய நலத்தை மட்டும் கருதாமல் சமூகத்தின் நலத்தை பெரிதும் கருதுகிறான் . மனிதன் சமூகத்தின் வளர்ச்சியை கண்டு சந்தோசம் பெறுகிறான் . தனுக்கு கிடைத்த சந்தோசத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறான் . தனுக்குள்ளே ஏற்படும் மாற்றத்தின் வழியாக புதிய சமூகத்தை படைக்கிறான் . வளமான சமுதாயம் மக்களின் வாழ்க்கையை மலரச் செய்கிறது . மனிதனுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது . மனிதன் சமூகத்தை நேசிக்க தொடங்குகிறான் . இந்த மாற்றம் அன்பு, பாசம் , கருணை , பண்பு ஆகிய தன்மைகளை மனிதனுக்கு வரமாக அளிக்கிறது . அவனுக்குள்ளே தன்னம்பிக்கை பிறக்கிறது . இந்த மாற்றம் மனிதனை மனிதனாக வைக்கிறது . இந்த மாற்றம் மனிதனுக்கு ஆத்மா சந்தோசத்தை கொடுக்கிறது . மனிதன் எந்த வயதிலும் சந்தோசத்தை பெறுகிறான் , எந்த நேரத்திலும் சந்தோசத்தை அடைகிறான் . இதற்கு வயது வரம்பில்லை , காலம் தடையில்லை . மனிதன் இந்த ஆத்மதிருப்தியை உணர்கிறான் , அனுபவிக்கிறான் . மனிதன் அனுபவிக்கும் ஆத்மதிருப்தி தான் வாழ்க்கையில் உண்மையான சந்தோசம் . இந்த சந்தோசத்தை பற்றி மனிதனுக்கு எந்த மொழியாலும் புரிய வைக்க முடியாது . இதை மனிதன் உணரத் தான் முடியும் . எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பது அல்லாமல் வேறொன்றும் அறிவேன் பராபரமே என்ற கருத்தைக் கொண்டு வாழும் மனிதன் விலைமதிக்க முடியாத உண்மையான சந்தோசத்தை அடைகிறான் .


2 comments:

  1. மிகவும் பயனுள்ளதொரு கட்டுரை தோழி !

    ReplyDelete