Friday, June 5, 2009

வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொண்டு வாழ வேண்டும்

உலகத்தில் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன . அவற்றுள் ஒரு சில சம்பவங்கள் மனிதனுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் கொண்டுவர இயமாலிருக்கலாம், அதாவது இன்று வரை அந்தச் சம்பவத்தை பற்றி நினைவுகூறுவதிற்கு வாய்ப்பில்லாமல் இருக்கலாம் . ஆனால் ஒரு சில சம்பவங்கள் மனிதனுடைய உள்ளத்திலே பதிந்து விடுகின்றன . இப்படிப்பட்ட சம்பவங்களால் மனித உடல் நிலையில் பல மாற்றங்களைக் காணலாம் . இந்த மாற்றமென்பது சந்தோஷத்தையும் கொடுக்கலாம் அல்லது துயரைத்தையும் கொடுக்கலாம் . இந்த மாற்றம் மனிதனுடைய உடலுக்குள் ஊற்று போல பெருகுகிறது . மனிதனுடைய உடலும் , உள்ளமும் மாற்றத்திற்கு ஏற்றது போல செயல்படுகிறான் . மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு நிக்ழ்வை ஞாபகப் படுத்திச் சொல்கிறான் என்றால் அந்தச் சம்பவம் அவனுடைய வாழ்க்கையில் தனிப்பட்ட இடத்தை பிடித்திருக்கிறது என்று சொல்லலாம் . இந்தச் சம்பவங்கள் மனிதனுக்குள்ளிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது . மனிதனுடைய வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் அவனுடைய வாழ்க்கையோடு இணைந்தது .

சந்தோஷமோ , துயரமோ இந்த இரண்டுக்கும் நடுவே , மனிதன் தன்னுடைய எல்லையை மீறாமல் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும் . இந்தச் சம்பவங்கள் மனிதனுக்கு அதிகமான உணர்வுகளை கொடுத்தாலும், அவன் சமநிலையான வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும் . எதையும் சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டு செல்லும் மனிதனை ஞானி என்று சொல்லலாம் . ஒரு மனிதனின் வாழ்க்கையில் துயரமிருக்கும்போது அவன் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியேற விரும்புகிறான் . மீண்டும் மீண்டும் துயரங்களை அவன் சந்திக்கும்போது அவன் போதையை தேடிச் செல்கிறான் . பிரச்சனையில் மூழ்கி வாழ்க்கையை வாழும் சமயத்தில் அதனை மறப்பதற்கு போதையை நாடுகிறான் . அவனுக்கு நடந்த துயரங்களை எல்லாம் மறக்கிறான் , அவன் தன்னையே மறந்து வாழ்கிறான் . சொல்லப்போனால் அவன் நடைபிணமாக நடமாடிக் கொண்டிருக்கிறான் . கடைசியில் அவன் மரணம் அடைகிறான் . ஒரு சம்பவத்தினால் உருவாகும் பிரச்சனையிலிருந்து தன்னை அகற்றிக் கொள்ள அவன் வேறொரு பிடிமானத்தை பிடித்துக் கொள்கிறான் . அவன் இதற்கு பதிலாக உருவாகிய பிரச்சனைக்கு எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு போராடினால் நிச்சயமாக அவன் வாழ்க்கையில் நல்லதொரு முடிவைக் காண முடியுமென்று சொல்லலாம் .

வானத்திலிருந்து மழைத்துளிகள் சாகரத்தில் விழுகின்றன . அந்த மழைத்துளிகள் சாகரத்தோடு கலந்தாலும் அவைகள் தன்னுடைய இருப்புநிலையை துறந்து விடவில்லை . சாகரத்திற்குள் மழைத்துளிகள் இருந்தாலும், அந்தத் துளிகள் ஒவ்வொன்றும் தன்னுடைய மகத்துவத்தை இழக்கவில்லை . அதுபோல மனிதனுக்கு வாழ்க்கை சாகரத்தில் ஒவ்வொரு சம்பவமும் மழைத் துளிகளைபோல தோன்றுகின்றன . இந்தச் சம்பவங்கள் மனிதனுக்கு ஒவ்வொரு அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது . இந்த ஒவ்வொரு அனுபவமும் அவனுக்குள்ளே புதியதொரு அனுபவத்தை உருவாக்குகிறது . மீண்டும் இந்த அனுபவங்கள் மனிதனை வாழ்க்கை சாகரத்தோடு இணைக்கிறது . மனிதனுடைய வாழ்க்கை ஒரு சக்கரத்தைபோல சுற்றி சுற்றி வருகிறது . அவனுடைய வாழ்க்கை சக்கரத்தில் ஒரு பொழுதில் சுகமான தென்றலும் , இன்னொரு பொழுதில் சூறாவளியும் வீசுகின்றன . இந்த உண்மையை அறிந்தவன் ஞானி என்று சொல்லலாம், இதை அறியாதவன் முட்டாள் என்று சொல்லலாம் . இந்த இரண்டு நிலைகளுக்கிடையே நம்மைநாமே சமநிலையாக வைத்துக் கொள்ள வேண்டும் .

No comments:

Post a Comment