Sunday, June 7, 2009

மனிதனே உன்னை அறிந்து கொள்

உலகில் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன . அவற்றில் ஒரு சில சம்பவங்கள் அப்படியே நின்று விடுகின்றன . வேறு சில சம்பவங்கள் ஆழ்ந்த காயம் பட்டு மறையாத வடு போல மனதை அரித்து விடுகின்றன . சம்பவங்களை நல்ல சம்பவங்கள் என்றும் , கெட்ட சம்பவங்கள் என்றும் இரண்டு வகைகளாக பாகுபடுதுகிறோம். நல்ல சம்பவம் நிகழும் போது மனிதனுக்கு இனிமையான உணர்வுகளைத் தருகிறது . கெட்ட சம்பவம் மனிதனுக்கு வேதனையை கொடுக்கிறது . மனிதனுடைய வாழ்க்கைப் பயணத்தில் இந்த இரண்டு சம்பவங்களும் மாறிமாறி நடக்கின்றன . இதனை எந்த மனிதனாலும் தவிர்க்க முடியாது . மனிதனுக்கு ஒரு கெட்ட சம்பவம் நடக்கின்ற போது அடுத்ததும் கெட்டவையாகவே நடக்கிறது . அடுத்தடுத்து கெட்ட சம்பவங்கள் நடக்கின்ற போது மனிதன் வாழ்க்கை என்ற துடுப்பை கைநழுவ விடாமல் தொடர்ந்து எதிர்நீச்சல் போட வேண்டும் . அவன் குழப்பம் அடைந்து அவனுக்குள்ளே ஒருவிதமான பயம் பிறக்கிறது . அப்போது சரியான குரு ஒருவர் கிடைத்திருந்தால் அவன் நிச்சயமாக இந்த வாழ்க்கை சாகரத்தின் கொந்தளிப்பிலிருந்து மீண்டு வர முடியும். அப்படிப்பட்ட குருவிடம் தனி ஒரு மனிதனை மாற்றுவது மட்டுமில்லாமல் மொத்த சமுதாயத்தையும் மற்றக் கூடிய சக்தியும் இருக்கிறது . இன்று ஒவ்வொரு நாடும் அழிவுப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது . இந்த விஷத்தை முளையிலே தூக்கி எரிவதிற்கு பக்குவமான குரு கிடைப்பாரா என்று ஒவ்வொரு மனிதனின் மனமும் ஏங்குகிறது .

ஒரு நாட்டில் எத்தனையோ பிரச்சனைகளுக்கு முடிவு காண்பதற்கு ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அழிவுப் பாதையை தேர்ந்து எடுத்துக் கொண்டு வன்முறையை கையாண்டு வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்கிறான் . முதலில் கண்மூடித்தனமாக மதம் கொண்ட யானையைப் போல ஒரு நாட்டையே சின்னாபின்னமாக்கிறான். இன்றைய மனிதன் எல்லாவற்றையும் தப்புத்தப்பாகவே முடிவெடுத்து செயல்படுகிறான் . அவனுடைய தப்பான நோக்கம் எவ்வளவு பெரிய சேதத்தை உருவாக்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் இந்த அமைதிப் பூங்காவில் புயலடிப்பதற்கு பதிலாக சுகமான தென்றல் வீசியிருக்குமல்லவா ?

மனிதனுடைய மனம் முழுவதும் பொறாமையும் பொச்சரிப்பும் குடிகொண்டுள்ளது . இது போதாதென்று ஏழை - பணக்காரன் , இல்லாதவன் - இருக்கப்பட்டவன் , உயர்ந்தவன் -தாழ்ந்தவன் , ஜாதி -மதம் போன்ற விரோதிகளும் அவனைச் சுற்றி நடமாடுகின்றன . இவை அனைத்தும் மனிதனை ஒரு கொலைக்காரனாகவோ , கொள்ளை அடிப்பவனாகவோ , தீவிரவாதியாகவோ மாற்றுகிறது . இப்படிப்பட்ட மாற்றம் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து அவனை மண்ணோடு மண்ணாக புதைத்து விடுகிறது . வீட்டுக்குள்ளே கணவன் -மனைவி கருத்து வேறுபாடு , வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை கைப்பற்றுவதற்கு போடும் தெருச் சண்டை , சமூகத்தின் இருபிரிவினர்களுக்கிடையே நடக்கும் ஜாதிக் கலவரம் , இரு நாட்டு இடையே மதத்தால் உருவாகும் வன்முறைகள் , பயங்கரவாதம் என்று படிப்படியாக நடக்கும் ஒவ்வொரு செயலும் மனிதனை ஒரு காட்டு மிருகமாக காட்டுகிறது . மதத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு மனிதனும் வெறித்தனமாக செயல்படும் செயல் ஒரு நாட்டையே சீரழித்து விடுகிறது. மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் . அப்போது நாடும் உருப்படும் , அவனுடைய வீடும் உருப்படும் .

1 comment:

  1. உங்கள் வலைப்பூ அருமையாக உள்ளது. நல்லப் பல கருத்துகளை உள்ளடக்கி உள்ளது. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள். நல்ல நம்பிக்கையான வரிகள்.. ஆன்மிக வழியில். நல்ல முயற்சி.

    ReplyDelete