Saturday, June 6, 2009

மனசாட்சி மனிதனுக்கு பாதுகாப்பைக் கொடுக்கிறது

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனசாட்சி வாழ்கிறது . ஒவ்வொரு மனிதனும் மனசாட்சி சொல்கிறபடி நடந்தால் தவறுகள் அதிகமாக நிகழ்வதை தடுக்கலாம் . மனசாட்சி மனிதனுக்கு எது நல்லது , எது கெட்டது என்று தெரியப்படுத்துகிறது . மனிதன் நல்ல செயலை செய்தபிறகு அவன் ஆத்மாத்ம திருப்தி அடைகிறான் . அவன் கெட்டதை செய்தால் குற்ற உணர்வோடு பரிதவிக்கிறான் . இப்படிப்பட்ட மனிதனை மனசாட்சியுள்ளவன்என்று சொல்லலாம் . சொத்துக்கள் , செல்வம் , குடும்பம் இவை அனைத்தும் மனிதனுடன் இறுதிவரை செல்லமுடியாது . ஆனால் அவன் செய்த தர்மம் , புண்ணியம் இரண்டும் ஆத்மசொரூபமாய் மனிதனை வழி நடத்திச் செல்கிறது . இந்த உலகத்தின் மாயை மனிதனுக்கு சொந்தமில்லை , அவை மனிதனுக்கு எந்தவிதத்திலும் அமைதி , பாதுகாப்பு தர இயலாது . மனிதன் அமைதியை தேடி பல தவறுகள் செய்கிறான் , அதுபோல அமைதி கிடைத்த பின்பும் சில தவறுகள் செய்து தனுக்கு கிடைத்த அமைதியை நழுவ விடுகிறான் . மீண்டும் அமைதியை தேடி நாடோடி போல அலைகிறான் . அமைதி என்பது வெளிப்புற உலகத்தில் கிடைப்பதில்லை , அவனுடைய மனசாட்சிகுள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறது . இதனை தெரிந்து கொண்டு செயல்பட்டால் அவனுடைய ஒவ்வொரு செயலிலும் தெளிவையும் , பகுத்தறிவையும் காணலாம் .

மனிதன் அமைதி கிடைப்பதற்கு தியானம் செய்கிறான் . தியானம் என்பது அவனுடைய மனநிலையை ஒருநிலை படுத்தி , செய்யப்படும் செயலின் மீது கவனத்தை செலுத்துகிறான் . தியானத்தின் மூலம் மனிதன் தன்னுடைய உடல் , உள்ளம் இரண்டையும் ஒரு நிலைபடுத்தி, நடந்தவை , நடக்கின்றவை , நடக்கப்போகும் நிகழ்வுகளின் மீது தன்னுடைய எண்ணங்களை ஓட விடுகிறான் . தியானத்தின் வழியே அவன் அன்றாட வாழ்க்கையின் இதமான வழியை புரிந்து கொள்கிறான் . அந்த வலி தாங்கும் அளவு வலித்தால் வாழ்க்கையின் இரண்டு சக்கரங்கள் ஒரே நிலையாக ஓடுகிறது . இதே வலி கூடுதலாக வலித்தால் வாழ்க்கையின் இரண்டு சக்கரங்கள் தனித்தனியாக பிரிந்து வெவ்வேறு பாதையில் ஓடத் தொடங்குகிறது . தியானம் என்பது அவனுக்கு வாழ்க்கையின் உண்மையான கருத்தை புரிய வைக்கிறது . தியானத்தின் மூலம் மனிதன் பக்குவமடைகிறான் , பதனப்படுகிறான் . அவன் முகத்தில் சாந்தமும் , தெளிவும் பிறக்கிறது . தியானம் மனிதனுக்கு ஞானத்தை கொடுக்கிறது , அவனை ஒரு குருவாக மாற்றுகிறது .

தியானம் மனிதனின் தன்மையை மாற்றுகிறது . உலகத்தின் பகட்டான வாழ்க்கையை தேடிச்செல்லும் ஒரு சராசரி மனிதனை இதற்கு அப்பாற்பட்டு சிந்திக்க வைக்கிறது . அவன் இந்த மாய உலகத்தை நன்றாக புரிந்து கொள்கிறான் . இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை என்று தெரிந்து கொள்கிறான் . இந்த உலகத்திலுள்ள பொருட்கள் , இவன் வாழ்ந்து கொண்டிருக்கும் பகட்டான வாழ்க்கை , அவனுடைய உடலும் ஒரு நாள் அழிந்து விடும் , ஆனால் அவனுடைய உள்மனம் , அதாவது மனசாட்சி என்கிற ஆத்மா மட்டும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் . இதற்கு அழிவே கிடையாது . அவன் தன்னை பாதுகாக்க ஆயுதங்களை வைத்துக் கொள்கிறான் , ஆளை நியமிக்கிறான் , தற்காப்பிற்காக சண்டைப் பயிற்சியை கற்றுக் கொள்கிறான் , இப்படி பல பாதுகாப்பு வழிகளை கையாளுகிறான் . ஆனால் ஒன்றை மட்டும் மறந்து மற்ற எல்லா வழிகளையும் செயல்படுத்துவதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்கிறான் . இதனால் எத்தனை சிரமங்களை சந்திக்க நேருகிறது . மேலும் பயனுள்ள நேரத்தை தேவைப்படாத செயலில் மீது செலவழித்து தன்னுடைய பலத்தை பலவீனமாக்கிக் கொள்கிறான் . அவனுடைய மனசாட்சியை பற்றி சிந்திக்காமல், இதர மாயைகளின் மீது தன்னுடைய கவனத்தை ஒட்டு மொத்தமாக செலுத்தி வாழ்க்கையினுடைய பயனுள்ள பகுதியை வீணாக்கி , நாளை என்ன நடக்கும் என்று குழப்பமான நிலையை பெறுகிறான் . இந்தக் குழப்பமே அவனுக்கு பயத்தை தருகிறது . பயம் அவனை சூழ்ந்து கொள்ளும்போது அவனுக்கு எல்லாம் இருட்டாக தென்படுகிறது . மனோதைரியத்தை இழக்கிறான் , அவனுக்கு அவன் மீது அவநம்பிக்கை பிறக்கிறது . எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்கிறான் . மனிதன் மனசாட்சியை அறிந்து செயல்பட்டிருந்தால் இத்தனை பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்க அவசியம் ஏற்பட்டிருக்காது . மனசாட்சி அவனுக்கு அமைதியான முறையிலே எந்தப் பிரச்சனையையும் சமாளிக்கும் தன்மையை கொடுக்கிறது . மனிதனுக்கு அவனுடைய மனசாட்சியே பாதுகாப்பான வாழ்க்கையை கொடுக்கிறது . இதை புரிந்து கொண்டு வாழ்ந்தால் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் ஆத்மாத்ம சந்தோஷத்தை பெறலாம் .

No comments:

Post a Comment